உள்ளூர் செய்திகள்
பக்தர்கள் தீ மிதித்தனர்.

சாரல் மழையில் நனைந்தபடி தீமிதித்த பக்தர்கள்

Published On 2022-04-14 16:31 IST   |   Update On 2022-04-14 16:31:00 IST
திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் சாரல் மழையில் நனைந்தபடி தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வரலாற்று சிறப்புமிக்க திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத  பிறப்புக்கு முதல் நாள் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். 

2 ஆண்டு காலமாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு திருவிழா  தொடங்கியது. கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா 10 தினங்கள் நடத்தப்பட்டு, 11வது நாளான நேற்று பூக்குழி திருவிழா நடத்தப்பட்டது. 

சுவாமி பொட்டி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா கொண்டுவரப்பட்டது. திரவுபதி அம்மன், அர்ச்சுனர், கிருஷ்ணர் ஆகியோருடன் சப்பரத்தில் கொண்டுவந்து சப்பரத்தின் பின்னால் தீ மிதிக்கும் பக்தர்கள் வந்தனர். 

வீதிஉலா கோவிலை வந்தடைந்ததும், பூசாரி உள்பட ஏராளமான பக்தர்கள், பெண்கள் கைக்குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அப்போது சாரல் மழை பெய்துகொண்டே இருந்ததால் நனைந்தபடியே தீமிதி திருவிழா நடத்தப்பட்டது. 

அந்த வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார், ஊர்காவல் படையினர் செய்திருந்தனர். தீமிதி திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா தசரதராஜா தலைமையில் செய்திருந்தனர்.

Similar News