உள்ளூர் செய்திகள்
பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் தெரிவித்தார். மொட்டமலை, காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கி வைத்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூறியதாவது:
தமிழக அரசு அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல் கல்வித் தொடர வேண்டும் என்று அதிக கவனம் செலுத்தி வருகிறது. பட்டாசு தொழிற்சாலைகள், கடைகள் அதிகமாக உள்ள இடங்கள், சாலை, பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் நடைபெறும் இடங்கள், பஸ் நிலையம் உள்ள பகுதிகள், ரெயில்வே நிலையம் உள்ள பகுதிகள், மார்கெட்டுகள், கோவில் வாசல்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், பீடி தொழில் செய்யும் இடங்கள், ஒர்க்ஷாப், ஜவுளிக்கடை நடைபெறும் இடங்கள், டென்ட் அமைக்கப்பட்டுள்ள இடங்கள், மீன் விற்பனை செய்யும் இடங்கள், இதர பொருள்கள் பதப்படுத்தும் இடங்கள், செங்கல் சூளை பகுதிகள், பனைத்தொழில் நடைபெறும் இடங்களில் பள்ளி செல்லாத குழந்தை கள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
எங்கு கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டால் அங்கு பள்ளி செல்லாத குழந்தைகள் இருப்பார்களோ, அங்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த இடங்களில் தினமும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி மேற்கொண்டு மாணவர்களின் உண்மைத்தன்மை அறிந்து, அருகாமைப்பள்ளியில் சேர்க்கை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கணக்கெடுப்பு பணியை வகுப்பு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலும், 9ம் வகுப்பு முதல் 12வரையிலும் அனைத்து மாணவர்களையும் கணக் கெடுப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி செல்லாமல் இருந்த வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர் குழந்தைகள் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவியரில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிகளில் சேர்க்கப்பட் டுள்ளனர். மீதமுள்ளவர் களையும் பள்ளியில் சேர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தவிட்டுள்ளார் என்றார்.
இந்த ஆய்வின்போது இல்லம்தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார் ஞானராஜ், மாடசாமி, விஜயபாலன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.