உள்ளூர் செய்திகள்
திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்தியம்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2022-04-10 14:10 IST   |   Update On 2022-04-10 14:10:00 IST
அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்தியம்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருமழபாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோயில் மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோயில் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதும், வசிஷ்டர், அகஸ்திய முனிவரால் பூஜிக்க பெற்றதுமாகும்.

இந்த கோயிலில் வியாக்ர பரத முனிவரின் புதல்வி சுயசாம்பிகை தேவியருக்கும், சிலால் முனிவரின் புதல்வர் நந்தியம்பெருமானுக்கும் திருக்கல்யாண விழா இரவு நடைபெற்றது.

முன்னதாக கோவிலின் முன்பாக உள்ள திருமண மேடையில் சுயசாம்பிகை தேவியருக்கும் திருநந்தியம்பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு, தயிர், பால் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, வேத வித்வான்கள் யாக பூஜையுடன் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன் கோயிலின் முன்பு கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாய அய்யாரப்பர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையில் மணமகள் சுயசாம்பிகை தேவியர் கழுத்தில் மணமகன் நந்தியெம்பெருமான் தாலி கட்ட, பக்தர்கள் அட்சதை தூவ திருக்கல்யாணம் சிறப்பாக நடைப்பெற்றது.

மண-மக்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைப்பெற்று, ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு சுவாமிகள் அருள்பாலித்தனர். நந்தி திருமணம் கண்டால் முந்தி திருமணம் நடைபெறும் என்ற இறை நம்பிக்கையின்படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிகளை வழிபட்டனர்.

பின்னர், நந்தியம்-பெருமானும், சுயசாம்பிகை தேவியாரும் மணக்-கோலத்தில் கண்ணாடி பல்லக்கில் அமர்ந்து திருமழபாடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நிகழ்ச்சியில் உள்ளதட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் பிற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News