உள்ளூர் செய்திகள்
உரிய நேரத்தில் வினாத்தாள் கிடைக்காமல் அவதி
விருதுநகரில் பிளஸ்-1 திருப்புதல் தேர்வு வினாத்தாள் உரியநேரத்தில் கிடைக்காததால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
விருதுநகர்
தமிழகம் முழுவதும் பிளஸ்-1 திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. மொழிப் பாட தேர்வுகள் முடிந்த நிலையில் நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. விருதுநகர் மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 82 பள்ளிகளில் இத்தேர்வு களை மாணவ, மாணவிகள் எழுதினர்.
வழக்கமாக தேர்வு வினாத்தாள் சென்னையிலிருந்து மாவட்ட கல்வி அலுவலருக்கு சி.டி. மூலம் அனுப்பப்படும். அதன்பின் பிரிண்ட் எடுக்கப்பட்டு உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு வேதியியல் வினாத்தாள்களை அனுப்ப வேண்டிய நிலையில் 78 பள்ளிகளுக்கு மட்டுமே வினாத்தாள்கள் அனுப்பப் பட்டது. இதனால் சத்திரரெட்டியபட்டி, சூலக்கரை விருதுநகர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 அரசு பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் கிடைக்கவில்லை.
தேர்வு நேரம் கடந்த பின்பும் வினாத்தாள்கள் வராததால் குழப்பமடைந்த ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டனர். அப்போது 4 பள்ளிகளுக்கு வினாத்தாள் கட்டு அனுப்பாது தெரியவந்தது. இதையடுத்து வினாத்தாள் இ-மெயில் மூலம் 4 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது. அவை ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு கொடுத்தபின் தேர்வுகள் தாமதமாக தொடங்கின.
அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்து வினாத் தாள்களை அனுப்பாததால் 4 அரசு பள்ளிகளில் தேவை யற்ற குழப்பமும், மாணவ மாணவிகளுக்கு பதட்டமும் ஏற்பட்டது. எனவே இதனை தடுக்க இனிமேல் உரிய கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.