உள்ளூர் செய்திகள்
கலியபெருமாள் கோவில் தேர் திருவிழா
கலியபெருமாள் கோவில் தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.
அரியலூர்:
அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கு அமலில் இருந்ததினால் திருவிழா நடைபெறவில்லை, இந்த ஆண்டு நாளை (10&ந்தேதி) ராமநவமி அன்று கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. கொடி ஏற்று விழா, சூரியவாகனம், வெள்ளி பல்லக்கு, வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி கருட வாகனம், படத்தேர், வெள்ளியானை வாகனம், திருக்கல்யாணம், கண்ணாடி பல்லக்கு, வெள்ளி சிம்மவாகனம், புன்னை மரம் வாகனம், வெண்சனத்தாழி, வெள்ளி குதிரை வாகனம் உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது.
வரும் 18ந்தேதி தேர் திருவிழாவும், 19ந்தேதி ஏகாந்த சேவையும் மிக சிறப்பாக நடைபெற உள்ளது.
18ந்தேதி அதிகாலையில் சின்னதேரில் ஆஞ்சநேய சுவாமியும், பெரிய தேரில் அருள்மிகு கலியுகவரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி,
பூமாதேவி ஆகியவைகள் மலர்களில் அலங்கரிக்கப்பட்ட தேரினை ஆதீன பரம்பரை தருமகர்த்தா கோ கோவிந்தசாமி, படையாச்சியார் மகன்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில் அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை திருக்கோவில் ஆதீனபரம்பரை தருமகர்த்தா கோ.கோவிந்தசாமி படையாட்சி மகன்கள் செய்து வருகின்றனர்.