உள்ளூர் செய்திகள்
தமிழக சட்டசபை

சட்டசபை கூட்டம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு

Published On 2022-03-30 13:16 IST   |   Update On 2022-03-30 15:20:00 IST
சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் ஏப்ரல் 6 முதல் மே மாதம் 10-ந்தேதி வரை நடத்துவதற்கு அலுவல் ஆய்வு குழுவில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டசபை கூட்டம் ஏப்ரல் 6-ந்தேதி தொடங்குகிறது.

மானியக் கோரிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடந்தது.

இந்த கூட்டத்துக்கு பிறகு சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் ஏப்ரல் 6 முதல் மே மாதம் 10-ந்தேதி வரை நடத்துவதற்கு அலுவல் ஆய்வு குழுவில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கூட்டம் நடைபெறும்.

மொத்தம் 22 நாட்கள் கூட்டம் நடக்கும். கடந்த முறை டி.வி.யில் கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது போல் இந்த முறையும் நேரடி ஒளிபரப்பு அமையும்.

சட்டசபை நிகழ்ச்சிகள் முழுவதும் ஒளிபரப்ப படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

கேள்வி:- 19 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்து விட்டாரா? எத்தனை மசோதாக்கள் கவர்னர் கையெழுத்திடாமல் நிலுவையில் இருக்கிறது.

பதில்:- இதை நீங்கள் கவர்னரிடம் கேட்கலாமே? கவர்னர் பக்கத்தில் தானே இருக்கிறார். அவரை சந்தித்து நீங்கள் விவரம் கேளுங்கள். நிருபர்களாகிய நீங்கள் அவரை சந்திக்க நேரம் கேட்டு இந்த கேள்வியை கேட்காலமே.

எங்களை பொறுத்தவரை தாமதமின்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை சட்டத்துறைக்கு அனுப்பி வைத்து கவர்னரின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைத்து விட்டோம். எனவே கூடுதல் விவரங்களை நீங்கள் கவர்னரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்.

கே:- இப்போது நடைபெறும் சட்டசபை அரங்கம் இட நெருக்கடியாக இருக்கிறதே? புதிய தலைமை செயலகத்திற்கு சட்டசபை எப்போது மாறும்?

ப:- இட நெருக்கடியை கருத்தில் கொண்டுதான் மறைந்த முதல்-அமைச்சர் கலைஞர் புதிய தலைமை செயலகத்தை கட்டினார்.

கே:- அப்படி என்றால் புதிய தலைமை செயலகத்துக்கு சட்டசபை எப்போதும் மாறும்?

ப:- இது அமைச்சரவை முடிவு எடுக்க கூடிய வி‌ஷய மாகும். நீங்களும் நானும் பொது ஆள்.

இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சட்டசபையில் 6-ந்தேதி நீர்வளத்துறை மானியக் கோரிக்கை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மானியக் கோரிக்கை எடுத்துக்கொள்ளப்படும்.

முதல் - அமைச்சர் பொறுப்பில் உள்ள காவல் துறை, தீயணைப்பு துறை மீதான விவாதம் மே 7-ந்தேதி நடைபெறுகிறது. அதன் மீதான விவாதங்கள் 2 தினங்கள் நடைபெறும். மே 9-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளிக்கிறார்.

மே 10-ந்தேதி பொதுத்துறை மானியக் கோரிக்கையுடன் சபை முடிகிறது.


Similar News