உள்ளூர் செய்திகள்
கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு
காரைக்குடியில் வீட்டு கதவை உடைத்து நகை திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழனிச்சாமி நகரில் வசித்து வருபவர் கனகவேல். இவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சாந்தி பெரியகோட்டையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.
இதனை நோட்டமிட்ட யாரோ வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவில் இருந்த நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வேலைக்கு சென்று திரும்பிய ஆசிரியை சாந்தி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன. இதுகுறித்து காரைக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தினர்.
பீரோவில் இருந்த 18 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதாக சாந்தி தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.