உள்ளூர் செய்திகள்
மந்தாரக்குப்பம் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது
மந்தாரக்குப்பம் அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மந்தாரக்குப்பம்:
மந்தாரக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் நேற்று காலை வீணங்கேணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், வடலூர் பார்வதி புரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முத்து (வயது 22), காமராஜர் நகர் பாலு மகன் அர்ச்சுனன் என்கிற அஸ்வின் (21), பெரியாக்குறிச்சி ராஜா மகன் சிவப்பிரகாசம் (23), வடக்கு சேப்பளாநத்தம் கணேசன் மகன் செந்தமிழ்வளவன் (21) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.