உள்ளூர் செய்திகள்
குப்பை அகற்றும் பணி

ஊட்டி மலைரெயில் பாதையில் 2-வது நாளாக குப்பைகள் அகற்றம்

Published On 2022-02-25 14:35 IST   |   Update On 2022-02-25 14:35:00 IST
குப்பை அகற்றும் பணியில் 360 ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி முதல் கல்லார் வரை மலைரெயில் பாதையில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை வீசி வருகின்றனர். இதனை வனவிலங்குகள் உண்பதால், அவற்றின் உடலுக்கு பாதிப்பு ஏறபடுகிறது.

இதுகுறித்த வழக்கு விசாரணையின் போது, ஊட்டி முதல் கல்லார் வரை உள்ள மலைரெயில் பாதையில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை காட்டு யானைகள் சாப்பிடுவதால் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அந்த கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி அதன் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி முதல் கல்லார் வரை உள்ள மலைரெயில் பாதையை 2 நாட்கள் தூய்மை பணி நேற்று தொடங்கியது. இன்று 2&வது நாளாக மலைரெயில் பாதையில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மஞ்சனக்கொரை ரெயில் தண்டவாள பகுதியிலும், குன்னூர் சப்&கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி தலைமையில் குன்னூர் மற்றும் கேத்தி ரெயில் நிலையம் பகுதியிலும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் தலைமையில் லவ்டேல் ஜங்ஷன் பகுதியிலும், 

உதவி இயக்குனர் இப்ராகிம்ஷா தலைமையில் அருவங்காடு ரெயில் தண்டவாள பகுதியில் தண்டவாளம் மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மதுபான பாட்டில்கள், குடிநீர் பாட்டில்கள், சாக்குப் பைகளில் சேகரிக்கப்பட்டன.

இந்த பணியில் 360 பணியாளர்கள் ஈடுபட்டனர். இனி வரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட ரெயில் தடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டாமலும், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளும் இந்த பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அம்ரித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News