தமிழ்நாடு செய்திகள்

மூலைக்கரைப்பட்டியில் அரச, வேப்ப மரங்களுக்கு திருமணம்- பக்தர்கள் வினோத வழிபாடு

Published On 2026-01-29 09:42 IST   |   Update On 2026-01-29 09:42:00 IST
  • இவ்விரு மரங்களும் ஒன்றாக வளர்வதை பார்ப்பது அரிதாகும்.
  • மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பது விஷேசமாகும்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி தங்கம் நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் அரச மரமும், வேப்ப மரமும் அடுத்தடுத்து, ஒன்றாக வளர்ந்துள்ளது.

கடந்த 20 ஆண்டு காலமாக இந்த மரங்கள் உள்ளன. இந்நிலையில் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும், அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க பக்தர்கள் முடிவு செய்தனர்.

இதற்கு முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு நேற்று அரச, வேப்ப மரங்களுக்கு திருமண வைபோகம் நடந்தது. இதையொட்டி 2 மரங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

அதனைதொடர்ந்து அரச மரம் ஆணாகவும், வேப்ப மரம் பெண்ணாகவும் கருதப்பட்டு, 2 மரங்களுக்கும் பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க வேம்பு மரத்திற்கு தாலி அணிவிக்கப்பட்டது. அதன் பின் விஷேச தீபாராதனைகளும் நடத்தப்பட்டது.

இந்த விநோத வழிபாட்டில் மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதுபற்றி பக்தர்கள் கூறுகையில், 'அரச மரம் ஆண் மரம் ஆகும். அது போல வேப்ப மரம் பெண் மரமாகும்.

இவ்விரு மரங்களும் ஒன்றாக வளர்வதை பார்ப்பது அரிதாகும். ஆனால் மூலைக்கரைப்பட்டி செல்வவிநாயகர் கோவிலில் 2 மரங்களும் ஒன்றாகவே வளர்ந்து வருவது அதிசயமாகும்.

இவ்வாறு வளரும் மரங்களில் தெய்வாம்சம் பொருந்தி இருக்கும். இறைவன் மரங்களில் குடியிருந்து வேண்டிய வரங்களை அருளுவார் என்பது எங்களது நம்பிக்கை.

அதிலும் மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பது விஷேசமாகும். இதனை காண்போர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கும். திருமண காட்சியை கண்டு வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்றனர்.

Tags:    

Similar News