உள்ளூர் செய்திகள்
வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல் படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா நேரில் பார்வையிட்டார்.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் எளம்பலூர் ஊராட்சி, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மருதடி ஊராட்சியில் மருதடி முதல் நாரணமங்கலம் ரோடு வரை மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் சாலை ஓரங்களில் மழைநீர் சேகரிப்பு குழி அமைத்தல் பணிகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து மருதடி கிராமப்பகுதியில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் முத்துலட்சுமி கணபதி என்பவர் வீடு கட்டும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். அனைத்து பணிகளையும் தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமார், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவர்மன், எளம்பலூர் ஊராட்சி தலைவர் சித்ராதேவி குமார், மருதடி ஊராட்சி தலைவர் பத்மாவதி சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.