உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் வாடகை செலுத்தாத கடைக்கு சீல் வைக்கப்பட்டபோது எடுத்த படம்.

ஊட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 11 கடைகளுக்கு சீல்- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Published On 2022-02-24 10:03 IST   |   Update On 2022-02-24 10:03:00 IST
ஊட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 11 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி:

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளன. கடந்த 1.7.2016 முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைகளில் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும், வியாபாரிகள் முழுமையாக செலுத்தாமல் இருந்து வந்தனர்.

தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை செலுத்தாததால் கடந்த ஆகஸ்டு மாதம் 757 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைத்த கடை வியாபாரிகள் நிலுவை தொகையை செலுத்தியதை தொடர்ந்து சீல்கள் அகற்றப்பட்டன. அதன்படி இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் நிலுவை தொகை வசூலாகி உள்ளது.

இதற்கிடையே நகராட்சி மார்க்கெட்டில் சில கடை உரிமைதாரர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர். அவர்களிடம் வாடகை நிலுவைத் தொகையை செலுத்த கோரி அதிகாரிகள் வலியுறுத்தினர். பின்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாடகை செலுத்தாததால் நகராட்சி வருவாய் அதிகாரிகள் கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து இறைச்சி கடைகள் உள்பட 11 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த கடைகள் முன்பு நோட்டீசும் ஒட்டப்பட்டது.

சீல் வைக்கப்பட்ட கடைகளின் உரிமைதாரர்கள் ரூ.5 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்து உள்ளனர். வாடகை செலுத்திய பின்னர் சீல் அகற்றப்படும். வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, வாடகை நிலுவை தொகையை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் தங்களது கடைக்கான குத்தகை உரிமத்தை ரத்து செய்து பொது ஏலம் விடப்படும். ஊட்டி நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வரிகள் வருகிற மார்ச் மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் என்றனர்.

Similar News