உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நீலகிரியில் 4 நகராட்சி, 11 பேரூராட்சிகளை கைப்பற்றிய தி.மு.க.

Published On 2022-02-23 16:00 IST   |   Update On 2022-02-23 16:00:00 IST
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் என 4 நகராட்சிகள் உள்ளன.
ஊட்டி:
 
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் என 4 நகராட்சிகள் உள்ளன. இங்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

4 நகராட்சியில் உள்ள  108 வார்டுகளில் தி.மு.க.  66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 16 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 3 இடங்களிலும், சுயேட்சைகள் 9 வார்டுகளிலும், முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு இடத்திலும் வெற்றியை சுவைத்துள்ளன.

ஊட்டி நகராட்சியில்  உள்ள 36 வார்டில் தி.மு.க. 20 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் நகராட்சி தலைவர் பதவி தி.மு.க. வசம் சென்றது.குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் தி.மு.க. 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதன் காரணமாக குன்னூர் தலைவர் பதவியையும் தி.மு.கவே கைப்பற்றியது.

கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு இடத்திலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் வெற்றி பெற்று தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியுள்ளது.நெல்லியாளயம் நகராட்சியில்  21 வார்டில் தி.மு.க. 13 இடத்தையும், காங்கிரஸ் 2, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 2, விடுதலை சிறுத்தை ஒரு இடத்திலும் வெற்றி பெற்று மீண்டும் தலைவர் பதவியை  தி.மு.க. வசமே வந்துள்ளது.

இதேபோல் 11 பேரூராட்சிகளும் தி.மு.கவே கைப்பற்றியுள்ளது. 183 இடங்களில் 105 இடத்தை தி.மு.க.வும், 26 இடங்களில் அ.தி.மு.க.வும்,  16 இடத்தை காங்கிரசும், 5 இடங்களில் பா.ஜ.கவும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 3 இடங்களிலும், வி.சி.க. 2 இடத்திலும், சுயேட்சைகள் 24 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

தேவர்சோலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் தி.மு.க. 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடத்திலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 2 இடத்திலும், முஸ்லிம் லீக் 2 இடங்களிலும் வெற்றி பெற்று தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. ஒவேலியில் 18 வார்டில் தி.மு.க. 11, காங்கிரஸ் 4, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

நடுவட்டம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க 8 வார்டிலும் வெற்றி பெற்றது. கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க 8 இடங்களிலும்,  காங்கிரஸ் 3 இடத்திலும் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றியது. அதிரட்டியில் உள்ள 18 வார்டில் 10 வார்டை தி.மு.கவும், ஒரு இடத்தை காங்கிரசும் பிடித்துள்ளது.

உலிக்கல் பேரூராட்சியில் 18 வார்டுகளில் தி.மு.க. 13 இடங்களிலும், வி.சி.க ஒரு இடத்திலும் வெற்றியை ருசித்துள்ளது. கோத்தகிரி பேரூராட்சியில் 21 வார்டில் 14 இடத்தை தி.மு.க பிடித்து தலைவர் பதவியை தன்வசப்படுத்தியுள்ளது. பிக்கட்டியில் 15-ல் தி.மு.க. 8-லும், காங்கிரஸ் 2-லும் வெற்றி பெற்றுள்ளது. கேத்தி பேரூராட்சியில் 18 வார்டில் 8-ல் தி.மு.க.வும், காங்கிரஸ் ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஜெகதளா பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 9-லும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றியை ருசித்துள்ளது. சோலூர் பேரூராட்சியில் 15 வார்டில் தி.மு.க. 9 வார்டுகளலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது.

Similar News