உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடி தயார்படுத்த வேண்டும் - மாவட்ட தேர்தல் பார்வையாளர் உத்தரவு
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் தலைமையில், வட்டார தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் ஆகியோர்களுடன் வாக்குப் பதிவு அன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது மாவட்ட தேர்தல் பார்வையாளர் கூறியதாவது:
நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் நுண்பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதனையும், வாக்குப்பதிவு நாளில் மாதிரி வாக்குப்பதிவுகள் சரியாக நேரத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் செய்யப்பட்டுள்ளதா என்பதனையும், பின்னர் மாதிரி வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் அவை அழிக்கப்பட்டுள்ளதா என்பதனையும் உறுதி செய்ய வேண்டும்.
வேட்பாளர்களின் முகவர் கள் தவிர வேறு எவரேனும் இருக்கின்றனரா என்பதனை கண்காணிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் உதகை நகராட்சியில் 13 பதற்றமான வாக்குச்சாவடிகளும், குன்னூர் நகராட்சியில் 5, கூடலூர் நகராட்சியில் 16, நெல்லியாளம் நகராட்சியில் 8, உலிக்கல் பேரூராட்சியில் 6, ஓவேலி பேரூராட்சியில் 7 என மொத்தம் 55 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வாக்குச்சாவடிகளில் தேவையான போலீசார் பாதுக £ப்பு கூடுதலாக ஏற்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நாளில் முன்கூட்டியே தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று அனைத்து பணிகளும் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதனையும் பார்வையிட வேண்டும்.
தேர்தல் பொருட்கள் அனைத்தும் உள்ளதா என்பதனையும், கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்பதனையும் பார்வையிட்டு உறுதி செய்து, பயன்படுத்திய உபகரணங்கள் சரியான முறையில் அப்புறப் படுத்தப்பட்டுள்ளதா என்பதனையும் உறுதி செய்ய வேண்டும்.
மாலை 5 மணிக்கு மேல் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எவ்வாறு அவர் கூறினார். முன்னதாக மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஊட்டி நகராட்சி, கேத்தி மற்றும் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பாதுகாப்பு பணிகள், வாக்குப்பதிவு நாளில் பயன்படுத்தப்படும் தேர்தல் பொருட்களின் இருப்பு ஆகியவற்றை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (ஜென்மம் நிலங்கள்) குணசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நகர்புற உள்ளாட்சி தேர்தல்) சீனிவாசன் மற்றும் நுண்பார்வையாளர்கள், வட்டார தேர்தல் பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.