உள்ளூர் செய்திகள்
பனிமூட்டம்

ஊட்டியில் கடும் பனிமூட்டம்-குளிர்

Published On 2022-02-15 16:00 IST   |   Update On 2022-02-15 16:00:00 IST
கடும் குளிரால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் துவங்கி 2 மாதங்கள் நீர் பனி காணப்படும். அதன் பின் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனி விழும்.  இச்சமயங்களில் கடும் குளிர் நிலவுவது வழக்கம். மேலும், இச்சமயங்களில் தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் மலர் செடிகள் பாதிக்கும். 

அதேபோல், புற்கள் மற்றும் வனபகுதிகளும் காய்ந்துவிடும். ஆனால், இம்முறை துவக்கம் முதலே பனியின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. ஜனவரி மாதம் முதலே உறைப்பனி தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதியில் தேயிலை செடிகள் கருகின. பல இடங்களில் புற்கள் காய்ந்து போயின.

கடந்த ஒரு வாரமாக பனியின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்பட்டது. ஊட்டியில் மட்டுமே இரவு நேரங்களில் பனி காணப்பட்டது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பனியின் தாக்கம் சற்று குறைந்ததுடன், குளிரும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.  இந்நிலையில், நேற்று மாலை நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பனி மூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பனி மூட்டத்தால் மாலை நேரங்களில் குளிர் அதிக மாக  காணப்பட்டது. இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிரால் பாதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் வெண்மை ஆடைகளுடன் சுற்றுலா தலங்களில் வலம் வந்தனர்.

Similar News