உள்ளூர் செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர் லதா

ஊட்டியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சிறையில் அடைப்பு

Published On 2022-02-11 15:33 IST   |   Update On 2022-02-11 15:33:00 IST
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை:

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட கரியமலை கிராமத்தை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜ். இவர் தனது நிலம் தொடர்பான சிட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் லதா(வயது 35) என்பவரிடம் விண்ணப்பித்தார். 
ரூ.4 ஆயிரம் லஞ்சம்
இதற்கிடையில் லதா, சிட்டாவில் பெயர் சேர்க்க இடைத்தரகர் கண்ணன் மூலம் சுந்தர்ராஜிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவர், ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) திவ்யா மேற்பார்வையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுந்தர்ராஜிடம் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க கூறினர். அதன்படி அவர் இடைத்தரகர் கண்ணனுடன் குந்தா தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். 
2 பேர் கைது
அங்கு பணியில் இருந்த லதாவிடம் அந்த பணத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் லதா, இடைத்தரகர் கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. லதா மீது துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது. 
விசாரணை முடிந்ததும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் கோவை மத்திய சிறையிலும், புரோக்கர் கண்ணன் குன்னூர் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Similar News