குன்னூர் அருகே பள்ளிக்குள் புகுந்து உணவு பொருட்களை தின்ற கரடி
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி என பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இவை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவதையும், அங்குள்ள பொருட்களை தின்பதும், சேதப்படுத்துவததையும் வழக்கமாக வைத்துள்ளது.
குன்னூர் பகுதியில் அண்மைக்காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், குன்னூர், சேலாஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்குள் கரடி ஒன்று புகுந்தது.
கரடி அங்கிருந்த உணவுப் பண்டங்களை எடுத்து சாப்பிட்டும், வெளியில் வீசி விட்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்தது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டது. இதுகுறித்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
வனத்துறையினர் விரைந்து வந்து பள்ளியின் அருகே கரடி நடமாட்டம் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.பள்ளிக்குள் கரடி புகுந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கொலக்கெம்பை பகுதியில் உள்ள உணவு கடையிலும் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது.