உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆலங்குளத்தில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் 2 பேர் சரண்

Published On 2022-01-22 09:28 GMT   |   Update On 2022-01-22 09:28 GMT
ஆலங்குளம் அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று 2 பேர் சிவகாசி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் சுரண்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் விமலா(வயது 36). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரிக்கு பொங்கல் படி கொடுக்க சென்றார்.

சாதாரண உடையில் மொபட்டில் அவர் சென்றார். அப்போது நெட்டூர் பஸ் நிறுத்தம் அருகே ஒரு கும்பல் வழிவிடாமல் நின்றது. அவர்களை விமலா வழிவிடுமாறு கூறினார். ஆனால் வழிவிட மறுத்த அந்த கும்பல், விமலாவை தாக்கியது.

இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் விமலா ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நெட்டூரை சேர்ந்த வேல்முருகன்(வயது 27), அப்பு என்ற அப்ரானந்தம்,  மாரியப்பன்(20), கண்ணன்(25) மற்றும் முருகன்(35) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் முக்கூடல் அருகே ஓடைமறிச்சானில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த அப்ரானந்தம் மற்றும் வேல்முருகனை கைது செய்ய முயன்றனர்.

ஆனால் வேல்முருகன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோரை அவர் கடித்துவிட்டு தப்ப முயன்றார். ஆனாலும் போலீசார் அவரையும், அப்ரானந்தத்தையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

முருகனும் கைது செய்யப்பட்ட நிலையில், கண்ணன் மற்றும் மாரியப்பன் தலைமறைவாகவே இருந்தனர். அவர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று கண்ணன், மாரியப்பன் ஆகிய 2 பேரும் சிவகாசி கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை ஆலங்குளம் போலீசார் எடுத்து வருகின்றனர்.
Tags:    

Similar News