உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

இன்னுயிர் காப்போம் திட்டம் - திருப்பூர் மாவட்டம் 3ம் இடம்

Published On 2021-12-29 13:29 IST   |   Update On 2021-12-29 13:29:00 IST
திருப்பூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக தலைமை அரசு மருத்துவமனை, 9தனியார், 11 அரசு மருத்துவமனை என 21 மருத்துவமனைகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, விபத்தில் சிக்குவோரை மருத்துவமனையில் அனுமதித்து, 48 மணி நேரம் தொடர்ந்து இலவச சிகிச்சை அளிக்க ‘இன்னுயிர் காப்போம்‘ நம்மை காக்கும் 48 திட்டம் தமிழக அரசால் கடந்த டிசம்பர் 18-ந்தேதி தொடங்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் 610 மருத்துவமனைகளில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் மாநில அளவில் 122 பேருக்கு சிகிச்சையளித்து செங்கல்பட்டு மாவட்டம் முதலிடத்திலும், 103 பேருக்கு சிகிச்சை வழங்கி கோவை இரண்டாமிடத்திலும் உள்ளது. 

97 பேருக்கு சிகிச்சை வழங்கியதால் திருப்பூர் 3-ம் இடத்தில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக தலைமை அரசு மருத்துவமனை, 9 தனியார், 11 அரசு மருத்துவமனை என 21 மருத்துவமனைகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறை இணை இயக்குனர் பிரேமலதா கூறுகையில்:

திட்டம் துவங்கிய 10 நாட்களில் தனியார் மருத்துவமனையில் 62 பேர், அரசு மருத்துவமனையில் 35 பேர் என மொத்தம் 97 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் ரூ.6.94 லட்சத்திற்கும், அரசு மருத்துவமனையில் ரூ.2.59 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.9 லட்சத்து 53 ஆயிரத்து 300க்கான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என்றார்

உண்டு மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில்:

விபத்தில் சிக்கியவர் எந்த நாடு, எந்த மாநிலம், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனையில் 48 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

சிகிச்சை கட்டணத்தில் ஒரு லட்சம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படும். விபத்தில் சிக்குவோரை சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரிவோரை ஊக்குவிக்கும் பொருட்டு பரிசு வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. பொன்னான நேரத்தில் சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூ. 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றனர்.

Similar News