உள்ளூர் செய்திகள்
பெண் சாமியாரின் புத்தாண்டு அருள் வாக்கு விழா

பெண் சாமியாரின் புத்தாண்டு அருள் வாக்கு விழாவுக்கு போலீஸ் தடை

Published On 2021-12-27 08:23 GMT   |   Update On 2021-12-27 08:23 GMT
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த பெண் சாமியாரின் நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு போலீசார் தடை விதித்துள்ளனர்.
ஏமாறும் மக்கள் இருக்கும் வரையில் விதவிதமாக மக்களை ஏமாற்றுபவர்களும் உருவாகி கொண்டே இருப்பார்கள்.

அந்த வகையில் போலி சாமியார்கள் பலர் மக்களை பல வழிகளில் ஏமாற்றி வரும் நிலையில் புதிதாக பெண் சாமியார் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் “டிரெண்டிங்” ஆகி பேசப்பட்டு வருகிறார்.

அன்னபூரணி அம்மாள் என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த பெண் சாமியார் பட்டு சேலை அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கி நடந்து செல்கிறார். சுற்றிலும் மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களில் உடை அணிந்த ஆண்-பெண் பக்தர்கள் அவரை பூக்களை தூவி வரவேற்று அழைத்து செல்கிறார்கள். மண்டபம் போன்ற ஒரு இடத்துக்குள் நுழைந்ததும் பெண் சாமியார் சிறப்பு விருந்தினர்கள் அமரும் ஆடம்பர இருக்கை ஒன்றில் அமர்கிறார்.

தனது வலது கையை காட்டியபடியே பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருக்கும் பெண் சாமியாரின் காலில் விழுந்து பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருமே வழிபடுகிறார்கள்.

கோவிலில் சாமிக்கு தீபம் காட்டுவது போல பெண்கள் அன்னபூரணி அம்மாள் சாமியாருக்கு விதவிதமாக தீபாராதனையும் காட்டுகிறார்கள். அப்போது அவரிடம் ஆசி பெறும் பக்தர்கள் திடீரென சாமி வந்தது போல ஆடுகிறார்கள். அன்னபூரணி அம்மாளின் உடல் அப்போது லேசாக சிலிர்க்கிறது. அவரும் உடலை குலுக்கியபடி வலது கையை காட்டியபடி ஆசி வழங்கிக் கொண்டே இருக்கிறார்.

இந்த நேரத்தில் குடும்பத்தோடு கணவன்-மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் தரையோடு படுத்து ஆசி பெறுகிறார்கள். இதுபோன்று வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருமே பெண் சாமியாரின் காலில் விழுந்து வணங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே நேரத்தில் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் புத்தாண்டையொட்டி பெண் சாமியார் காலை 9 மணியில் இருந்து 12 மணி வரை அருள்வாக்கு கூறப்போவதாகவும் அதற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

இந்த நிலையில்தான் பெண் சாமியார் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வீடியோவுடன் அவரது கடந்த கால வாழ்க்கை தொடர்பான வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்ப பிரச்சினை தொடர்பான சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியில் சாதாரண உடையில் அந்த பெண் சாமியார் பங்கெடுத்துள்ளார்.

இந்த வீடியோவையும், அவர் பெண் சாமியாக மாறிய வீடியோவையும் பலர் ஒன்றாக இணைத்து வெளியிட்டு காரசாரமான விவாதங்களையும் ஏற்படுத்தி இருந்தனர்.

இதைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த பெண் சாமியாரின் நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு போலீசார் தடை விதித்துள்ளனர். மண்டப உரிமையாளரை அழைத்து இது தொடர்பாக பேச்சு நடத்தினர். அப்போது மண்டப உரிமையாளர் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அட்வான்ஸ் வாங்கியிருப்பதாக தெரிவித்தார். அதனை திருப்பி கொடுத்து விட வேண்டும் எனவும், நிகழ்ச்சி நடத்துவதற்கு எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது எனவும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து மண்டப உரிமையாளரும் நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளிக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்காக பெண் சாமியாரின் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்டபத்துக்கு சென்று பூஜையும் செய்துள்ளனர். அப்போது அன்னபூரணி அம்மாள் இங்கு வைத்துதான் அருள்வாக்கு சொல்லப் போவதாக கூறி இருக்கிறார். அதற்காகத்தான் பூஜை செய்துள்ளோம் எனவும் பெண் சாமியாரின் சீடர்கள் தெரிவித்துள்ளனர். இதுவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து புத்தாண்டு அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பிடித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.

இது தொடர்பாக அவர்களது செல்போன்களை தொடர்பு கொண்டபோது அந்த எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளன. இருப்பினும் பெண் சாமியாரின் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்த ரகசிய விசாரணையில் போலீசார் இறங்கி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் கூறும்போது, “அருள்வாக்கு கூறுவதாக கூறி மண்டபத்தை பதிவு செய்த பெண் ஈரோட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை” என தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்கனவே பல போலி சாமியார்கள் பெருகி பக்தர்களை ஏமாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் திடீரென பெண் சாமியாராக அவதாரம் எடுத்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் காரசாரமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக அந்த பெண்ணிடம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விசாரணை நடத்திய லட்சுமிராமகிருஷ்ணனும் கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறும்போது, “சம்பந்தப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கருத்து சொல்வது சரியாக இருக்காது. இருப்பினும் இதுபோன்ற சாமியார்களை பொதுமக்கள் நம்புவது முட்டாள்தனமானது” என்று தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News