தமிழ்நாடு செய்திகள்

வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை- இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது

Published On 2026-01-07 07:29 IST   |   Update On 2026-01-07 07:29:00 IST
  • வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
  • பெங்களூருவில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு வர உள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இது தவிர கோடியக்கரை பறவைகள் சரணாலயம், நீண்ட நெடிய கடற்கரை, தமிழகத்தின் உயரமான நாகை கலங்கரை விளக்கம் ஆகியவையும் நாகையில் உள்ளன.

இதனால் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நாகை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளது. உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் சுற்றுலா தலங்களை, ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதி உள்ளது. அதற்காகவே, அந்த மாநிலங்களுக்கு ஏராளமானோர் சுற்றுலா செல்கின்றனர்.

இதைப்போல சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதற்காக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வேளாங்கண்ணியை சுற்றி சுமார் 25 கிலோமீட்டர் வான் பரப்பளவில் ஹெலிகாப்டர் பறக்கும். இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 6 பயணிகள் பயணிக்கலாம்.

ஒரு பயணிக்கு ரூ.6000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதற்காக பெங்களூருவில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு வர உள்ளது.

வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி, சென்னை விமான நிலையத்துக்கும் ஹெலிகாப்டர் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. சுற்றுலா, பொழுதுபோக்கை தாண்டி இயற்கை பேரிடர் நிகழும் போதும், அவசர காலங்களில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கும் வசதியுடன் வேளாங்கண்ணியில் ஹெலிபேட் அமைக்கப்படுகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள், வி.ஐ.பி.க்கள், ராணுவத்தினர் பயன்படுத்தும் விதமாக இந்த ஹெலிபேடு அமைக்கப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டர் சேவை குறித்து ஜெயம் ஏவியேசன் என்ற நிறுவனம் நாகை மாவட்ட நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஹெலிகாப்டர் சேவை தொடங்குவது நாகை மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. வேளாங்கண்ணியில் இந்த ஹெலிகாப்டர் சேவை இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News