தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் பூ மார்க்கெட் முன்பு தூய்மைப்பணியாளர்கள் சாலை மறியல்

Published On 2026-01-06 14:37 IST   |   Update On 2026-01-06 14:37:00 IST
  • இன்று காலை வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் அந்தப்பகுதியில் சேகரமான குப்பைகளை அகற்றினர்.
  • சக தூய்மை பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு கடையை முற்றுகையிட்டு பெருமாள் கோவில் வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் அருகே மாநகராட்சி பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பூக்கடைகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தினம்தோறும் தூய்மை பணியாளர்கள் பூ மார்க்கெட்டில் சேகரமாகும் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

இன்று காலை வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் அந்தப்பகுதியில் சேகரமான குப்பைகளை அகற்றினர். அப்போது பூ வியாபாரி நல்லுசாமி என்பவர் தனது கடையில் சேகரமாகிய குப்பைகளை கடைக்கு எதிரே நடை பாதையில் கொட்டி விட்டு சென்றுள்ளார்.

அப்போது தூய்மைபணியாளர்கள் இங்கு கொட்டக்கூடாது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து கொட்ட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நல்லுசாமி, தூய்மை பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கடையில் இருந்த பூக்கள் வைக்கக்கூடிய டிப்பரை வைத்து லட்சுமி என்ற தூய்மை பணியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சக தூய்மை பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு கடையை முற்றுகையிட்டு பெருமாள் கோவில் வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு திருப்பூர் தெற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். 

Tags:    

Similar News