ஐகோர்ட்டின் தீர்ப்பை மதித்து தமிழக அரசு மலை மேல் தீபம் ஏற்ற வேண்டும்- திருப்பரங்குன்றம் முருக பக்தர்கள் கோரிக்கை
- மதுரை ஐகோர்ட் வழங்கியுள்ள நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்.
- மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியபோதே தமிழக அரசு தீபம் ஏற்றி இருக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் முருக பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெரு பகுதி மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். மேலும் அங்கிருந்த போலீசார் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் அவர்கள் இனிப்புகள் வழங்கினர். ஐகோர்ட் உத்தரவிற்கு திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முருக பக்தர்கள் வரவேற்பு தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
லீலாவதி: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தற்போது மேல்முறையீட்டு வழக்கில் மதுரை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பில் மகிழ்ச்சியளிக்கிறது. இது நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த நீதிமன்ற தீர்ப்பை உடனே செயல்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து: மதுரை ஐகோர்ட் வழங்கியுள்ள நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். தமிழக அரசும், கோவில் நிர்வாகமும் இந்த தீர்ப்பை மதித்து மலைமேல் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யாமல் தீபம் ஏற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்று மலை அடிவார நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு மூதாட்டி ஒருவர் இனிப்பு வழங்கிய காட்சி.
கிருஷ்ண மூர்த்தி: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மறுப்பதற்கு முக்கிய காரணம் ஓட்டு வங்கி தான். ஏற்கனவே மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியபோதே தமிழக அரசு தீபம் ஏற்றி இருக்க வேண்டும். தற்போது 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் இதனையும் தமிழக அரசு நிறைவேற்றப் போவதில்லை. மீண்டும் மேல்முறையீடு செய்வார்களே தவிர தீபம் ஏற்ற மாட்டார்கள்.
தேன்மொழி: முருகனின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மகாதீபம் மலை மேல் உள்ள தூணில் ஏற்றுவது தொடர்பான ஏற்பட்ட பிரச்சனை மிகுந்து வருத்தமளித்து வந்தது. தற்போது மேல்முறையீட்டு வழக்கில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சாதகமான தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.