செய்திகள்
ஆன்லைன் மோசடி

ஆன்லைனில் செல்போன் வாங்கியவரிடம் நூதன முறையில் ரூ.2¾ லட்சம் மோசடி

Published On 2021-11-20 04:29 GMT   |   Update On 2021-11-20 04:29 GMT
ஆன்லைனில் செல்போன் வாங்கியவரிடம் நூதன முறையில் ரூ.2¾ லட்சத்தை ேமாசடி செய்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மும்பை:

நவிமும்பையை சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் சமீபத்தில் ஆன்லைனில் ரூ.18 ஆயிரத்து 549-க்கு கிரெடிட் கார்டை பயன்படுத்தி புதிய செல்போன் வாங்கினார். இந்தநிலையில் அவரது கிரெடிட் கார்டில் இருந்து 2 முறை ரூ.18 ஆயிரத்து 549 எடுக்கப்பட்டு இருப்பதை பின்னர் அவர் தொிந்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து சம்மந்தப்பட்ட வங்கியில் முறையிட்டுள்ளார். அப்போது வங்கி ஊழியர் சில நாட்களில் தவறுதலாக எடுக்கப்பட்ட பணம் திரும்ப கிடைத்துவிடும் என்றார்.

அதே நேரத்தில் பணம் விரைவாக கிடைக்க சம்மந்தப்பட்ட ஆன்லைன் வணிக நிறுவனத்தையும் தொடா்பு கொள்ளுமாறு கூறினார்.

இதையடுத்து அந்த நபர் ஆன்லைன் வணிக நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை இணையத்தில் தேடினார். அப்போது அவர் இணையத்தில் ஆன்லைன் வணிக நிறுவனத்தின் தொடர்பு எண்ணை எடுப்பதற்கு பதிலாக, ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் போலியாக பதிவு செய்யப்பட்டு இருந்த மோசடி ஆசாமியின் எண்ணை எடுத்து தொடர்பு கொண்டார்.

இதில் மோசடி ஆசாமி 55 வயது நபரின் கிரெடிட் கார்டில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை திருப்பி தருவதாக கூறி, ஒரு செயலியை அவரை பதிவிறக்கம் செய்ய வைத்தார். பின்னர் அந்த செயலி மூலமாக மோசடி ஆசாமி, அந்த நபரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 783 மற்றும் கிரெடிட் கார்டில் இருந்த ரூ.63 ஆயிரத்து 325-ஐ அபேஸ் செய்தார்.

இந்தநிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர் சம்பவம் குறித்து நவசேவா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News