செய்திகள்
நெய்வேலி கைலாசநாதர் கோவிலில் சாமி சிலைகள் திருட்டு
நெய்வேலி கைலாசநாதர் கோவில் பூட்டை உடைத்து சாமி சிலைகள் திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெய்வேலி:
நெய்வேலி நகரம் வட்டம் 21 பகுதியில் சிவகாமி அம்மையார் உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம்போல் அதேபகுதியை சேர்ந்த கோவில் ஊழியர் ரமேஷ் என்பவர் கோவில் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது கருவறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட 7 கிலோ எடை கொண்ட சிவகாமி அம்மையார் சிலை, 6 கிலோ எடை கொண்ட நந்தி மீது அமர்ந்திருந்த சிவன், பார்வதி சிலை மற்றும் 4 தங்க காசுகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் யாரோ? திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிந்து, கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் மற்றும் தங்க காசுகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கோவில் பூட்டை உடைத்து சாமி சிலைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.