செய்திகள்
விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்த தர்பூசணியை படத்தில் காணலாம்.

கடலூரில் தர்பூசணி விற்பனை அமோகம்

Published On 2021-04-19 21:47 IST   |   Update On 2021-04-19 21:47:00 IST
கடலூரில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் தர்பூசணி, இளநீர், நுங்கு விற்பனை சூடுபிடித்து வருகிறது.
கடலூர்:

கடலூரில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சராசரியாக 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், கடலூரில் போதுமான மழை இல்லை. மாறாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

நேற்றும், காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல, செல்ல வெயில் கொளுத்தியது. இந்த வெயிலுக்கு இதமாக கடலூரில் தர்பூசணி, இளநீர், நுங்கு விற்பனை சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஒரு கிலோ ரூ.20-க்கும், வெட்டிய சிறிய துண்டு ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதை அதிகம் பேர் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். தர்பூசணி காட்டுமன்னார்கோவில், சோழத்தரம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விளைகிறது.

இருப்பினும் கடலூருக்கு மரக்காணம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் தர்பூசணி கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் ஒரு கிலோ ரூ.15-க்கு வாங்கி, வியாபாரிகள் ரூ.20-க்கு விற்பனை செய்கின்றனர். இருப்பினும் இது கடந்த ஆண்டை விட விலை அதிகம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இது தவிர பழச்சாறு கடைகளிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது.

Similar News