செய்திகள்
விருத்தாசலத்தில் சாலையோரத்தில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணற்றை படத்தில் காணலாம்.

விருத்தாசலத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் உயிர் பலி வாங்க காத்திருக்கும் ஆழ்துளை கிணறு

Published On 2021-04-19 17:17 IST   |   Update On 2021-04-19 17:17:00 IST
விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிர் பலி வாங்க ஆழ்துளை கிணறு ஒன்று காத்திருக்கிறது. இதை உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் பூதாமூர் பூந்தோட்டம் பகுதியில் பரங்கிப்பேட்டை -விருத்தாசலம் சாலை விரிவாக்கப் பணிக்காக ஆழ்துளை கிணறு 160 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டது.

இதில் தண்ணீர் கிடைக்காததால், மற்றொரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு முறையாக மூடாமல் அப்படியே போட்டுவிட்டு, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலட்சியமாக சென்று விட்டனர்.

சாலை ஓரத்தில் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறு தற்போது உயிர் பலி வாங்க காத்திருக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். ஏனெனில் இந்த ஆழ்துளை கிணற்றின் அருகில் சிறுவர்கள் பலர் ஆபத்தை அறியாமல் விளையாடுகின்றனர்.

ஏற்கனவே திறந்தநிலை ஆழ்துளை கிணறுகளில் சிறுவர்கள் பலர் விழுந்து உயிரிழந்த துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. எனவே அதுபோன்ற விபரீத சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாக நெடுஞ்சாலை துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து பயன்பாட்டில் இல்லாத இந்த ஆழ்துளை கிணறை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News