செய்திகள்
கடலூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள திரவ மருத்துவ ஆக்சிஜன் தொட்டியை படத்தில் காணலாம்.

கடலூர் அரசு மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயார் - அதிகாரி தகவல்

Published On 2021-04-16 12:23 GMT   |   Update On 2021-04-16 12:23 GMT
கடலூர் அரசு மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் முதல் கட்ட பரவலில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழப்பு அதிகரித்தது. இதை தடுக்க ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய படுக்கை வசதிகள் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டன.

கடலூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், இங்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதை நோயாளிகளுக்கு செலுத்தும் பணி நடைபெற்று வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், இங்கு ரூ.18 லட்சம் செலவில் 6 ஆயிரம் லிட்டர் திரவ மருத்துவ ஆக்சிஜன் தொட்டி பொருத்தப்பட்டது. இதில் இருந்து கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமின்றி, மகப்பேறு போன்ற முக்கிய சிகிச்சைகள் அளிப்பதற்கும் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

தற்போது கொரோனா 2-வது அலை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆக்சிஜன் 5 அல்லது 6 நாட்களுக்கு போதுமானதாக உள்ளதாகவும், தேவைப்படும் போது ஆக்சிஜன் நிரப்பப்பட்டு நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருவதாகவும் நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா ஆகியோர் தெரிவித்தனர்.

இது பற்றி கண்காணிப்பாளர் சாய்லீலா கூறுகையில், இந்த மருத்துவமனையில் 91 ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் நாள் ஒன்றுக்கு 140 சிலிண்டர்கள் வரை நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வசதி உள்ளது. திரவ நிலையில் உள்ள மருத்துவ ஆக்சிஜன் வசதி இங்கு தான் முதன் முதலில் பொருத்தப்பட்டு உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தற்போதைய நிலையில் தயாராக உள்ளது என்றார்.
Tags:    

Similar News