செய்திகள்
பணம் பறிமுதல்

உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.2 கோடி பணம்-பரிசு பொருட்கள் பறிமுதல்

Published On 2021-03-24 16:45 IST   |   Update On 2021-03-24 16:45:00 IST
கடலூர் மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்டதாக இதுவரை ரூ.2 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளதால், போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் 27 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 27 நிலையான கண்காணிப்பு குழுவும், 9 வீடியோ கண்காணிப்பு குழுவும், 9 செலவின கண்காணிப்புகுழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை இந்த குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த கடந்த மாதம் 26-ந் தேதி மாலை முதல் நேற்று மாலை வரை 1 கோடியே 74 லட்சத்து 52 ஆயிரத்து 402 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதவிர ரூ.36 லட்சத்து 24 ஆயிரத்து 860 மதிப்புள்ள பாத்திரங்கள், சேலை, தொப்பிகள், டி-சர்ட்டுகள், மதுபானம் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசு பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம் மற்றும் பரிசு பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 262 ஆகும். மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மாவட்டத்தில் இதுவரை 65 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News