செய்திகள்
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2021-02-14 17:08 IST   |   Update On 2021-02-14 17:08:00 IST
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு ஊராட்சி கட்டுவான் பிறைகிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்த புதுக்குளம், மயான கொட்டகை மற்றும் அரசுதொடக்க பள்ளிக்கு சொந்தமான இடம் ஆகியவை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் கறம்பக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் கட்டுவான்பிறை கிராம மக்கள் சார்பில், கட்டுவான் பிறை கிராமத்தில் காணாமல்போன புதுக்குளம், மயான கொட்டகை, அரசு பள்ளி இடம் ஆகியவற்றை கண்டுபிடித்து தரக்கோரி நேற்று கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், கருப்பையா ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்றிய அலுவலகத்தின் முன்பு அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவலறிந்த கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றப்படும், மயான கொட்டகையை இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், பள்ளி இடத்தில் வழங்கபட்ட முறைகேடான பட்டா ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News