செய்திகள்
திட்டக்குடி அருகே சிறுமியை தாயாக்கிவிட்டு சென்னையில் பதுங்கிய வாலிபர் கைது
திட்டக்குடி அருகே சிறுமியை தாயாக்கி விட்டு சென்னையில் பதுங்கி இருந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம்:
திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 29). இவர் தனது உறவினரான திட்டக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை மிரட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சசிகுமார் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி, சிறுமியிடம் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் சிறுமி கர்ப்பமடைந்தாள். இதையறிந்த பெற்றோர், சிறுமியிடம் கேட்டபோது நடந்த சம்பவம் குறித்து கூறினாள். இதற்கிடையே சசிகுமார் வெளிநாடு வேலைக்கு சென்று விட்டார்.
இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை பலாத்காரம் செய்த சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் வெளிநாடு வேலைக்கு சென்ற சசிகுமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்து, ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சென்னை சென்று, அங்கு தங்கியிருந்த சசிகுமாரை கைது செய்து விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.