ஒரு வாரத்துக்கு பின்னர் கடலூரில் மீண்டும் கொட்டி தீர்த்த மழை
கடலூர்:
புரெவி மற்றும் நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. இதனால் பல்வேறு கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்து தீவுகள்போன்று காட்சியளித்தது. ஏராளமான வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை மழைவெள்ளம் மூழ்கடித்து குளம்போல் காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போதுதான் அந்த பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
கடந்த ஒரு வாரமாக கடலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் பனிபொழிவு அதிகமாக இருந்தது. காலையிலும் தொடர்ந்து பனிபொழிவு இருந்ததால் சாலைகள் அனைத்தும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பகல்நேரங்களில் வெயில் சுட்டெரித்தது.
தற்போது தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி கடலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்ய தொடங்கியது.
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுநகர், திருப்பாதிரிபுலியூர், வண்டிபாளையம், மஞ்சக்குப்பம், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர், செம்மண்டலம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழைபெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.
இன்று காலை 6 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இது சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னரும் மழை விட்டு விட்டு பெய்துகொண்டே இருந்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கிநின்றது. கடலூர் பஸ்நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. திருப்பாதிரிபுலியூர், பாடலீஸ்வரர் கோவில் உட்புற வளாகத்தில் மழைநீர் தேங்கியது.
மழைநீரை வெளியேற்றும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளம் வடிந்து பொதுமக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பியபோது தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
மந்தாரக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பல்வேறு கிராமங்களில் நள்ளிரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு பெய்துகொண்டே இருந்தது. இதனால் தாழ் வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முருகன்குடி, கோனூர், செம்பேரி, சவுந்தரசோழபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் போக்குவரத்து குறைவாக காணப்பட்டது. பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சென்றனர்.