செய்திகள்
காவலர் தேர்வில் செல்போனை உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து சென்ற 2 வாலிபர்கள் கைது
காவலர் தேர்வில் செல்போனை உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:
தமிழ்நாடு முழுவதும் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதில் நெய்வேலியில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில், குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 22) என்பவர் போலீசாருக்கு தெரியாமல் தனது உள்ளாடைக்குள் செல்போனை மறைத்து வைத்து தேர்வு மையத்திற்குள் சென்று விட்டார். அங்கு அவருக்கு கொடுத்த வினாத்தாளை செல்போனில் புகைப்படம் எடுத்து, நண்பரின் செல்போனுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினார். இதை நோட்டமிட்ட கண்காணிப்பாளர், மோகன்ராஜை கையும், களவுமாக பிடித்து தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றினார்.
இதேபோல் நெய்வேலி மந்தாரக்குப்பம் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்திற்குள் தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து செல்போனை எடுத்த சென்ற வினோத்குமார் (24) வினாத்தாளை புகைப்படம் எடுத்து உறவினருக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியபோது பிடிபட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.