செய்திகள்
தண்டராம்பட்டு அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் கொள்ளை
தண்டராம்பட்டு அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தென்முடியனூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மாணிக்கம், சங்கர், ஏழுமலை ஆகிய 3 பேரும் விற்பனையாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல கடையை பூட்டி கொண்டு சென்றனர். மறுநாள் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் வைத்திருந்த மதுபாட்டில்கள் விற்பனையான பணம் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 160-ஐ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் 4 மதுபாட்டில்களையும் திருடி சென்று உள்ளனர்.
இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசில் விற்பனையாளர்கள் 3 பேரும் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.