செய்திகள்
வேட்டவலம் அருகே ராணுவவீரர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
வேட்டவலம் அருகே ராணுவவீரர் வீட்டில் 20 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேட்டவலம்:
வேட்டவலத்தை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு நீலகண்டன், ஜெய்சங்கர் உள்பட 3 மகன்கள் உள்ளனர். அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள். நீலகண்டன் ராணுவத்தில் வேலைபார்த்து வருகிறார்.
நீலகண்டன் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் தனது தம்பி ஜெய்சங்கரிடம் திருவண்ணாமலையில் உள்ள ராணுவ கேன்டீனில் பொருட்கள் வாங்க சென்றார். வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றனர். வீட்டு சாவியை வழக்கம் போல வாசற்படியின் வைத்து விட்டு சென்றனர்.
இந்த நிலையில் மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் ஜெய்சங்கர் வீட்டின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை நீங்கள் யார் என்று அங்கிருந்தவர்கள் கேட்டதற்கு ஜெய்சங்கரின் நண்பர்கள் என்று கூறி போனில் பேசுவது போன்று அங்கிருந்து சென்று விட்டனர்.
மேலும் செல்லங்குப்பம் கிராமத்தில் ரேஷன் கடையில் பொருட்களை வாங்குவதற்கு அந்த தெருவில் உள்ள பொதுமக்களும் சென்றுவிட்டனர். இதனால் திரும்பவும் வந்த அந்த நபர்கள் நீலகண்டன் வீட்டில் இருந்த சாவியை எடுத்து பூட்டைத் திறந்து வீட்டிற்குள் சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகைகளை திருடிக்கொண்டு, சாவியை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
சிறிது நேரத்தில் நிலத்திற்கு சென்றிருந்த ஜெய்சங்கரின் அம்மா பச்சையம்மாள் வீட்டுக்கு வந்தார். கதவை திறந்து உள்ளேசென்றபோது பீரோ உடைபட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில் வைத்திருந்த 20 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிசென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெய்சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வந்து பார்த்துவிட்டு வேட்டவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகர், பன்னீர்செல்வம், தனிப்பிரிவு ஏட்டு கோட்டீஸ்வரன் ஆகியர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.