செய்திகள்
கொலை

மதுகுடித்துவிட்டு வந்து அடித்ததால் தீர்த்துக்கட்டினேன்- காவலாளி கொலை வழக்கில் கைதான மனைவி தகவல்

Published On 2020-11-01 11:52 IST   |   Update On 2020-11-01 11:52:00 IST
கலசபாக்கம் அருகே காவலாளி கொலை வழக்கில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். மதுகுடித்துவிட்டு வந்து அடிக்கடி அடித்ததால் தீர்த்துக்கட்டினேன் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை அடுத்த கடலாடியில் உள்ள போலீசார் குடியிருப்பு அருகில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதில் இரவு நேர காவலாளியாக அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 40) என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கட்டுமான பணிகள் நடைபெறும் சார் பதிவாளர் அலுவலகம் பின்புறம் உள்ள ஏரியில் ஆறுமுகம் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஆறுமுகத்தின் மனைவி ஈஸ்வரியை போலீசார் விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆறுமுகம் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அவர் குடித்து வந்து அடிக்கடி ஈஸ்வரியை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அதனால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் வேறு யாராவது சம்பந்தப்பட்டு உள்ளனரா? என்றும், வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News