செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

வேலூர் மாவட்டத்தில் காய்கறி வியாபாரிகள் உள்பட 142 பேருக்கு கொரோனா

Published On 2020-09-02 23:20 IST   |   Update On 2020-09-02 23:20:00 IST
வேலூர் மாவட்டத்தில் காய்கறி வியாபாரிகள் உள்பட 142 பேருக்கு ஒரேநாளில் கொரோனா உறுதியானது.
வேலூர்:

வேலூர் மாங்காய் மண்டியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், ஊழியர்கள் மற்றும் வேலூர் லாங்குபஜாரில் சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிலரின் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. அதில், 3 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா இருப்பது உறுதியனாது. அதையடுத்து அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வியாபாரிகள் கடையில் பணிபுரிந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மண்டித்தெருவில் உள்ள கடை வியாபாரிக்கு சளி, இருமல் அறிகுறி காணப்படடன. அவரின் பரிசோதனையில் அவருக்கும் தொற்று இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து கடை ஊழியர்கள், குடும்பத்தினர் வீடுகளில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நர்சுகள், ஊழியர்கள் என்று 4 பேருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்பூரில் உள்ள தோல்தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றும் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர், குடியாத்தத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நபர், வேலூர் நகரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் நபர் ஆகியோரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

அதைத்தவிர வேலூர் காந்திரோட்டை சேர்ந்த 3 வயது ஆண்குழந்தை, சத்துவாச்சாரியில் 5 வயது ஆண்குழந்தை, விருபாட்சிபுரத்தில் 90 வயது முதியவர், தொற்று பாதித்த நபர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 10 பேர் உள்பட மாநகராட்சி பகுதியில் 28 பேர் என்று மாவட்டம் முழுவதும் 142 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 10,965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News