செய்திகள்
கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்த காட்சி

நாகையில், மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி - போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

Published On 2020-07-12 13:12 IST   |   Update On 2020-07-12 13:12:00 IST
சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி நாகையில் நடந்த போராட்டத்தின்போது மீனவர்கள் தீக்குளிக்க முயன்றனர். அப்போது மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
நாகப்பட்டினம்:

கடல் மீன் பிடிப்பு ஒழுங்கு முறை சட்டத்தின்படி மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் சுருக்குமடி, இரட்டைமடி உள்ளிட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதையொட்டி சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க நாகையை அடுத்த வாஞ்சூர், கானூர், மேலையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

இது மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகை நம்பியார் மீனவ கிராமத்தினர் அங்குள்ள சமுதாய கூடத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது, சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும். மீனவர்கள் சிரமப்பட்டு பிடித்து வரும் மீன்களை பறிமுதல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகளை கண்டித்தும் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் மீனவர்கள் முடிவு செய்து அறிவித்தனர்.

அதன்படி நேற்று போராட்டம் நடந்தது. இதன் காரணமாக மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கடற்கரை பகுதியில் நிறுத்தி வைத்தனர். இதனால் நம்பியார் நகர் மீனவ கிராமத்திலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் 500-க்கும் மேற்பட்ட போலீ சார் குவிக்கப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்தும் 2 வஜ்ரா வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. போராட்டத்தையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நாகை நம்பியார் நகர் சமுதாய கூடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் மீனவர்கள் ஒன்று கூடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த வலையை பயன்படுத்தி பிடித்த மீன்களை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது அங்கு வந்த உதவி கலெக்டர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் தாசில்தார் ஆகியோரின் வாகனங்களை முற்றுகையிட்ட மீனவ பெண்கள் மண்எண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றனர். அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலு மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணியாக புறப்பட்டனர். அவர்களை ஏழைப்பிள்ளையார் கோவில் அருகே பப்ளிக் ஆபீஸ் சாலையில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, கலெக்டர் அலுவலகம் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மீனவ பெண்கள் இரும்பு தடுப்புகளை ஆக்ரோஷமாக தூக்கி எறிந்து அதை தாண்டி செல்ல முற்பட்டனர்.

இதையடுத்து மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் ஒலிபெருக்கி மூலம் மீனவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் மீனவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மீனவ பஞ்சாயத்தார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மீனவ பஞ்சாயத்தார்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக நாகையில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.

அதேபோல சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி நேற்று பூம்புகார் பஸ் நிலையம் அருகே மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு ஆதரவாக பூம்புகார், தருமகுளம் ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் கடையடைப்பு செய்து இருந்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல், பழையார், கொட்டாயமேடு, மன்மதநகர், தாண்டவன்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டத்தை தொடர்ந்து நாகை மீனவர்கள், அதிகாரிகள் இடையேயான கலெக்டர் அலுவலகத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில், நாகை நம்பியார் நகர் மீனவ பஞ்சாயத்தார் கூறுகையில், 15-ந் தேதிக்குள் நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் மீனவர்களை திரட்டி பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என்றனர்.

Similar News