செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயற்சி - சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு
மணல்மேடு போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணல்மேடு:
மணல்மேடு அருகே நாராயணமங்கலத்தில் உள்ள ஒரு தெருவில் சம்பவத்தன்று செல்போனில் சத்தமாக பேசி சென்றது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக மணல்மேடு போலீஸ் நிலையத்தில் இரு பிரிவை சேர்ந்தவர்களும் புகார் கொடுத்தனர். இதில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களை மட்டும் கைது செய்த போலீசார் மற்றொரு பிரிவினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 14 நாட்களுக்கு மேலாகியும் மற்றொரு பிரிவினரை கைது செய்யாததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மணல்மேடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று மணல்மேட்டில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ஈழவளவன் தலைமையில் 750-க்கும் மேற்பட்ட கட்சியினர் திரண்டனர். பின்னர் அவர்கள், மணல்மேடு பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, சாமிநாதன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பஞ்சாலை என்ற இடத்தில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்தவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அந்த இடத்திலேயே அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது இந்த வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவது குறித்தும், ஒரு தரப்பினரை கைது செய்யாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள், 2 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் முற்றுகையிடப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மயிலாடுதுறை-கும்பகோணம்-சீர்காழி செல்லும் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.