செய்திகள்
காரைக்கால் மீனவர்களால் தாக்கப்பட்ட தரங்கம்பாடி மீனவர்களை படத்தில்காணலாம்.

சுருக்குமடி வலை வீசியதை தட்டிக்கேட்ட தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் - போலீசார் விசாரணை

Published On 2020-07-09 13:13 GMT   |   Update On 2020-07-09 13:13 GMT
சுருக்குமடி வலை வீசியதை தட்டிக்கேட்ட தரங்கம்பாடி மீனவர்கள் மீது காரைக்கால் மீனவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொறையாறு:

தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலை மற்றும் அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியை சேர்ந்த 20 கிராம மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் சுதர்மேன் என்பவர் தனக்கு சொந்தமான சிறிய வகை பைபர் படகில் சக்திவேல், சுப்பிரமணியன், சின்னையன், அருண்குமார், ஆறுமுகம், திலீப் ஆகியோருடன் தரங்கம்பாடி அருகே 6 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பெரிய விசைப்படகில் வந்த காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள், தரங்கம்பாடி மீனவர்கள் விரித்த வலையின் அருகிலேயே சுருக்குமடி வலையை வீசியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட தரங்கம்பாடி மீனவர்கள் 7 பேரையும், காரைக்கால் பகுதி மீனவர்கள் மரக்கட்டை, இரும்பு குழாய் கொண்டு தாக்கி, படகு மற்றும் என்ஜினை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதில் காயம் அடைந்த மீனவர்கள் 7 பேரும் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்களுக்கு கடலில் இருந்து தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மற்ற மீனவர்கள் உதவியுடன் 7 மீனவர்களும் மீட்கப்பட்டு தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி மீன்வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன், தரங்கம்பாடி தாசில்தார் சித்ரா, மண்டல துணை தாசில்தார் அருள் ஜோதி, வருவாய் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அங்கு சென்று தாக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

இதுதொடர்பாக தரங்கம்பாடி கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடுக்கடலில் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News