குடியாத்தத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள்
குடியாத்தம்:
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் தமிழக அரசின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, துணை தாசில்தார் செந்தில், வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி, பூங்கோதை, வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலக உதவியாளர் வடிவேலு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தம் தாசில்தார் வத்சலா, நகராட்சி ஆணையர் ரமேஷ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்துக்கொண்டு 517 தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய் உட்பட மளிகை பொருட்களை வழங்கினார்கள்.
தொழிலாளர்கள் சமூக இடைவெளியில் நின்று பெற்று சென்றனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அன்னை ராஜம்மாள் கட்டுமானம் மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் இமயவரம்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில், வெங்கடாஜலபதி, குமார் உள்பட அரசு அதிகாரிகள், அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.