செய்திகள்
இடமாற்றம்

வேலூர் சரகத்தில் 110 சப்-இன்ஸ்பெக்டர்கள் தனிப்பிரிவு போலீசார் திடீர் இடமாற்றம்

Published On 2020-01-08 11:26 GMT   |   Update On 2020-01-08 11:26 GMT
வேலூர் மாநகர தனிப்பிரிவு போலீசார் 4 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்:

வேலூர் மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை களைகட்டுகிறது. வேலூர் சுண்ணாம்பு கார தெருவில் நடந்த அதிரடி சோதனையில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சத்துவாச்சாரி பகுதியில் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. தினமும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்கின்றனர். விருதம்பட்டு காட்பாடி பகுதியில் காட்டன் சூதாட்டம் களை கட்டுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து வேலூர், சத்துவாச்சாரி விருதம்பட்டு, அணைக்கட்டு பகுதிகளை சேர்ந்த தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் தெற்கு போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு முரளிகிருஷ்ணன், சத்துவாச்சாரி தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தீனதயாளன், வேலூர் வடக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார், அணைக்கட்டு தனிப்பிரிவு ஏட்டு சரவணன், விருதம்பட்டு தனிப்பிரிவு ஏட்டு பாலமுரளி ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப் பட்டனர். அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தனிப்பிரிவு போலீசார் மாற்றம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் வேலூர் திருவண்ணாமலை, ராணிப் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரக திற்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் 110 பேரை பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டார். அவர்களுக்கு பணியிடம் மாற்றத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

போலீசாரின் இந்த அதிரடி இடமாற்றம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News