செய்திகள்
கொள்ளை

ஆலங்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியை, மகனை தாக்கி நகை-பணம் பறிப்பு

Published On 2019-11-18 16:54 GMT   |   Update On 2019-11-18 16:54 GMT
ஆலங்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியையை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்த முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வடகாடு: 

ஆலங்குடி அருகே உள்ள சிதம்பரவிடுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி விஜயா (வயது 55). குளமங்கலம் அரசு பள்ளி ஆசிரியையான இவர் நேற்று முன்தினம் தனது மகன் விக்னேசுடன் (29) வந்து புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் இரவில் அவர்கள் சிதம்பரவிடுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். 

பள்ளத்திவிடுதி பகுதியில் உள்ள அம்புலியாற்று பாலத்தில் சென்றபோது, அங்கு நின்ற முகமூடி அணிந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை உதைத்தனர். இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் விக்னேசும், விஜயாவும் கீழே விழுந்தனர். அப்போது அருகே வந்த முகமூடி அணிந்த நபர்கள், கத்தியை காட்டி மிரட்டியதோடு விஜயா, விக்னேஷ் ஆகியோரை தாக்கினர். இதில் விக்னேசுக்கு கையில் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து அவர்கள் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்து 500, விஜயா அணிந்திருந்த ½ பவுன் கம்மல் மற்றும் செல்போன், ஏ.டி.எம். கார்டு போன்றவற்றை அந்த நபர்கள் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த விக்னேஷ் கொத்தமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, வீட்டிற்கு சென்றார்.

இது குறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளி ஆசிரியையை தாக்கி பணம், நகைகள் உள்ளிட்டவை பறித்துச்சென்ற மூகமுடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News