செய்திகள்
கோப்புப்படம்

பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர் தவற விட்ட ரூ.1.74 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கைதிகள்

Published On 2019-11-12 07:48 GMT   |   Update On 2019-11-12 07:48 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர் தவற விட்ட ரூ.1.74 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கைதிகளை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட சிறை அருகில் சிறைத்துறை சார்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிர்வாகத்தால் பெட்ரோல் பங்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தண்டனை கைதிகளில் நல்லொழுக்கம் பெற்ற 25-க்கும் மேற்பட்ட கைதிகள் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகின்றனர்

இந்த நிலையில் இன்று அதிகாலை பெட்ரோல் பங்க்குக்கு இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் வந்துள்ளார். அவர் பெட்ரோல் நிரப்பிவிட்டு அவருடைய கைப்பையை அங்கேயே தவறவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

அதனை கண்ட பங்க்கில் பணியாற்றிவரும் சிறைக் கைதிகளான புஷ்பகுமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் அதை சோதனை செய்தபோது அதில் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக அவர்கள் அந்தப் பணத்தை பணியில் உள்ள சிறைத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பையை சோதனை செய்த போது அதில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் பணம் இருந்தது. மேலும் அந்த பையில் ஒரு துண்டுச் சீட்டில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் தான் அந்த பணத்திற்கு சொந்தக்காரர் என்பது தெரியவந்தது

உடனடியாக அவரை அழைத்து இந்த பணத்தை சிறைத்துறை போலீசார் ஒப்படைத்தனர். இதற்கிடையே பெட்ரோல் பங்கில் பணியாற்றும் சிறைக்கைதிகள் பங்க்கில் தவற விட்ட பணத்தை எடுத்துக் கொடுத்த சம்பவம் புதுக்கோட்டையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கைதிகள் இருவருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

இதற்கிடையே புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி அந்த இரு கைதிகளையும் மற்றும் அந்த நேரத்தில் பணியாற்றிய சிறைத்துறை போலீசாரையும் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார்.
Tags:    

Similar News