செய்திகள்
பயனற்ற ஆழ்துளை கிணறு

பயனற்ற ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.1000 பரிசு

Published On 2019-10-29 06:13 GMT   |   Update On 2019-10-29 06:13 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆதாரத்துடன் தகவல் அளித்தால் ரூ.1000 பரிசு வழங்கப்படும் என்று நாமக்கல் தலைமலை சேவா டிரஸ்ட் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை:

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் சுஜித் பலியானதையடுத்து பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திறந்தநிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனே மூடுமாறு கலெக்டர் உமாமகேஸ்வரி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் குடிநீர்,மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக அமைக்கப்பட்டு, திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன.

மேலும் பல்வேறு இடங்களில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளை உள்ளூர் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூடி வருகின்றனர்.

மேலும் வடகாடு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மற்றும் அரசு சார்பில் போடப்பட்டு பயன்பாடின்றி மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளை மூடுவது குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் சீனிவாசன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், அவர்களுடன் இணைந்து திறந்தநிலை ஆழ்துளை கிணறுகளை மூடவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.


மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் சார்பில் அமைக்கப்பட்டு மூடப்படாமல் ஏராளமான ஆழ்துளை கிணறுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு அவற்றை மூட வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆழ்துளை கிணறுகள் மூடப்படுவது குறித்து புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கூறும் போது, திறந்தநிலையில் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு அவ்வப்போது ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி பெரும்பாலான ஆழ்துளை கிணறு மூடப்பட்டு விட்டன. தற்போது கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து மூடப்படாத கிணறுகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று சிறப்புகூட்டம் நடத்தப்படுகிறது. அப்போது எத்தனை கிணறுகள் மூடப்பட்டுள்ளன என்கிற விவரம் தெரியவரும் என்றார்.

இதனிடையே திருச்சி , நாமக்கல் மாவட்டங்களில் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆதாரத்துடன் தகவல் அளித்தால் ரூ.1000 ரொக்க பரிசுடன், அதை மூடவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் தலைமலை சேவா டிரஸ்ட் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News