செய்திகள்
குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

ஆலங்குடி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Published On 2019-09-27 12:54 GMT   |   Update On 2019-09-27 12:54 GMT
ஆலங்குடி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் ஊராட்சிக்குட்ப்பட்ட தெற்கு கூழாட்ச்சி கொல்லை பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழுதானதாக கூறப்படுகிறது. 

இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அவர்கள் அதனை சரி செய்யாததால் அப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். தற்போது கொத்தமங்கலத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கபடுவதே இல்லை என்றும் இதனால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கூட அரசின் பிரதிதிகள் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு மேல் குடிநீர் விநியோகம் இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கொத்தமங்கலம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் உடனடியாக பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News