செய்திகள்

இந்துக்களை அவமதித்தால் தமிழகத்தில் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம்- மன்னார்குடி ஜீயர் ஆவேசம்

Published On 2019-05-15 13:40 IST   |   Update On 2019-05-15 13:40:00 IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து போன்ற சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பேசினால் தமிழகத்தில் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார்.
திருச்சி:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கடந்த 12-ந்தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி பகுதியில் பேசினார்.

அப்போது அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. பா.ஜனதா சார்பில் அவரது கட்சிக்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக கோவில்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதன் மூலம் அனைத்து இந்துக்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசு மீது நம்பிக்கை வந்துள்ளது.

மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றது அவரது தேசபக்தியை காட்டுகிறது. அதாவது பிரிவினைவாதத்திற்கு எதிராக அவர் வைத்திருந்த தேச பக்தி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால் நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றது தவறுதான்.


தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துக்கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என்கிறார். அவரது கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் இதுபோன்று சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பேசினால் தமிழகத்தில் நடமாட விடமாட்டோம். கமல்ஹாசன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டது. அதனால்தான் அவர் தொடர்ச்சியாக இந்துக்களுக்கு எதிராக பேசி வருகிறார்.

கமல்ஹாசன் மட்டுமல்ல, இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம். கமல்ஹாசன் கட்சிக்கு தடை விதிக்க கோரி அகில இந்திய துறவியர் பேரவை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்போம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி கோவிலை விட அதிகமான நகைகள் இருக்கிறது. அதனை முழுமையாக கணக்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News