நாகர்கோவில் அருகே ரோட்டோரத்தில் கார் கவிழ்ந்தது- குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே டோனாவூரைச் சேர்ந்தவர் சாலமன் பாக்கியராஜ். இவர் வெளிநாட்டில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார்.
வெளிநாட்டில் இருந்து நேற்று ஊருக்கு திரும்புவதாக தனது மனைவி ரோஸ்வின் (வயது 37) என்பவரிடம் கூறினார். இதையடுத்து ரோஸ்வின், தனது குழந்தைகள் கெபின் (7), கிங்ஸ்லின் (5) ஆகியோருடன் திருவனந்த புரத்தில் இருந்து கணவரை அழைத்து வருவதற்காக காரில் புறப்பட்டனர். காரை அதே பகுதியைச் சேர்ந்த துரைமுத்து என்பவர் ஓட்டினார். நள்ளிரவு இவர்கள் திருவனந்தபுரம் சென்றனர். வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய சாலமன் பாக்கியராஜை அழைத்துக் கொண்டு காரில் ஊருக்கு திரும்பினார்கள்.
நாகர்கோவில் அருகே வெள்ளமடம் கிறிஸ்துநகர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர் பாராத விதமாக டிரைவர் துரைமுத்துவின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கார் தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் ரோட்டோரத்தில் இருந்த தென்னந்தோப்புக்குள் கார் புகுந்தது. அங்கிருந்த மரத்தில் மோதி கார் கவிழ்ந்தது.
காரில் இருந்த சாலமன் பாக்கியராஜ், ரோஸ்வின், அவரது குழந்தைகள் கெவின், கிங்ஸ்லின், டிரைவர் துரைமுத்து ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும், நெடுஞ்சாலை ரோந்து படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.