செய்திகள்

மதுரவாயலில் லாரி மீது லோடு வேன் மோதல் - டிரைவர் பலி

Published On 2019-04-14 12:49 IST   |   Update On 2019-04-14 12:49:00 IST
மதுரவாயலில் லாரி மீது லோடு வேன் மோதலில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

கோவையை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25) டிரைவர். இவர் பழனியில் இருந்து மதுரவாயலுக்கு பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை ஏற்றிக் கொண்டு லோடு வேனில் வந்து கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை 5 மணி அளவில் மதுரவாயல் பைபாஸில் வந்தபோது கட்டுபாட்டை இழந்த லோடு வேன் திடீரென முன்னால் சென்ற டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி டிரைவர் கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த கிளீனர் மூர்த்தி அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் லோடு வேனை ஓட்டிய போது டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் கண்ணியப்பன் (வயது 60). இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்.

நேற்று மாலை தன் நண்பர் ஒருவருடன் காரில் ஊத்துக்கோட்டையில் உள்ள உறவினர்களை சந்திக்க வந்தார். பின்னர் அவர்கள் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றார்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே பெரியபாளையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி புளி மூட்டைகளுடன் வந்த லாரி திடீரென மோதியது.

இதில் கண்ணியப்பன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

கண்ணியப்பனுடன் வந்த அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக பெரியபாளையம் - ஊத்துக்கோட்டை சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது நெரிசலில் சிக்கி நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தாராட்சியை சேர்ந்த நவீன், பிரவீன், வைதேகி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Tags:    

Similar News