செய்திகள்
கோப்புப்படம்

கொல்லைப்புறமாக பதவிக்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published On 2019-04-08 05:18 GMT   |   Update On 2019-04-08 05:18 GMT
வாரிசுப்படி மு.க.அழகிரிதான் பொறுப்புக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் கொல்லைப்புறமாக பதவிக்கு வந்தவர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #LokSabhaElections2019 #DindigulSreenivasan #MKStalin
திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் அ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

ஜெயலலிதா இறந்ததும் அ.தி.மு.க.வும், ஆட்சியும் என்னவாகுமோ என்று நினைத்தனர். ஒருபக்கம் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலினும், மறுபக்கம் கட்சி மற்றும் ஆட்சியை கைப்பற்ற டி.டி.வி.தினகரனும் முயன்றனர்.

தெய்வத்தின் அருள் 100 சதவீதம் கிடைத்து எடப்பாடி பழனிசாமி ஒப்பற்ற முதல்-அமைச்சராக, 2½ ஆண்டுகளாக பணியாற்றி சிங்கமாக திகழ்கிறார். மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்கிறார்.

ஜெயலலிதா வழியில் அயராது உழைத்து மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்துகிறார். இவரை பார்த்து, மு.க.ஸ்டாலின் தரம்தாழ்ந்து பேசுகிறார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் பல நன்மைகளை செய்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் தொகுதிக்கு மட்டும் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துள்ளார். திண்டுக்கல்லில் முன்பு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது.

தற்போது காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு தினமும் வழங்கப்படுகிறது. அதேபோல் அனைத்து தொகுதிகளிலும் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இவரை பார்த்து ஆள்வதற்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்து முதல்-அமைச்சரானவர், எடப்பாடி பழனிசாமி.



மு.க.ஸ்டாலினை பார்த்து நான் கேட்கிறேன். நீங்கள் யார்? உங்களுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம். வாரிசு அடிப்படையில் வரவேண்டும் என்றால் மு.க.அழகிரி தான் பதவிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், கொல்லைப்புறம் வழியாக நீங்கள் வந்து இருக்கிறீர்கள். காங்கிரஸ், தி.மு.க.வும் ஆட்சியில் இருந்த போது தான் அனைத்து ஊழலும் நடந்துள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, கருணாநிதியின் ஆட்சி தான்.

நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் நல்லாட்சி நடக்கிறது. அவரை அணுகி தமிழ்நாட்டுக்கு வேண்டிய அத்தனை நன்மைகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெறுகிறார். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வந்ததற்கு, முதல்-அமைச்சரின் சாமர்த்தியமான அணுகுமுறையே காரணம். கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களை நமக்கு கொடுத்ததால், இரட்டை இலையின் கோட்டையான திண்டுக்கல்லை பா.ம.க.வுக்கு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DindigulSreenivasan #MKStalin
Tags:    

Similar News